இதெல்லாம் படிச்சிட்டீங்களா?

சிவாஜியின் கதை-1

ஷாகாஜி போன்ஸ்லேக்கும் ஜீஜாபாய்க்கும் மகனாக 1630 பிப்ரவரி 19 ம் நாள் புனே அருகிலுள்ள ஷிவ்னேரி கோட்டையில் பிறந்தார். இவருக்கு சிவா என்று பெயரிட்டனர். எதிரிகளால் கைப்பற்றப் பட்ட தங்கள் நாட்டின் விடுதலையே லட்சியமாக வளர்ந்தார் சிவாஜி. தன் பதினாறாம் வயதில் பீஜப்பூர் சுல்தானுக்கெதிராக கிளர்ச்சி செய்து டோர்னா கோட்டையை கைப்பற்றினார். தொடர்ந்து கோண்டானா மற்றும் ராஜ்கட் கோட்டைகளும் சிவாஜியின் கைக்கு வந்தன.

அடுத்து முகலாயர்களுக்கெதிரான போரைத் துவக்கினார் சிவாஜி. தன் சகோதரர் சாம்பாஜியைக் கொன்ற அப்சல்கான் என்ற தளபதியை பிரதாப்கர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கொன்றார். இதன் மூலம் மராட்டிய மக்களின் ஆராதனைக்குரிய தலைவரானார். பின்னர் கோலாப்பூர் அருகே பீஜப்பூரின் மாபெரும் படையை குறைந்த வீரர்களைக்கொண்டு சிதறடித்தார்.

பின்பு சிவாஜி முகலாயப்படைகளை பலமுறை கொரில்லா போர்முறையால் தாக்கி அழித்தார். இதனால் கோபம் கொண்ட முகலாய மன்னர் ஔரங்கசீப் ஆம்பர் நாட்டின் ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு பெரும்படையை சிவாஜியை எதிர்ப்பதற்கு அனுப்பினார்.

இப்போரில் சிவாஜியின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதனால் முகலாயப்பேரரசுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக் கொண்டார்.

எனினும் சிவாஜியின் பேரில் சந்தேகம் கொண்ட ஓரங்கசீப் அவரை தன் தலைநகருக்கு அழைத்து சபையில் அவமரியாதை செய்தார். சிவாஜி ஆத்திரம் கொள்ளவே அவரைக் கைது செய்து கன்வர் ராஜா ராம்சிங்கின் பாதுகாப்பில் வீட்டுக் காவலில் வைத்தார். அங்கிருந்து தந்திரமாகத் தப்பிய சிவாஜி மூன்றாண்டுகள் கழித்து பெரும்படை சேர்த்துக்கொண்டு மீண்டும் முகலாயப் படைகள் மீது போர் தடுத்தார்.

இம்முறை தான் இழந்த பல இடங்களைக் கைப்பற்றிய சிவாஜி கோண்டானா கோட்டையை மீண்டும் கொரில்லா போர்முறையால் மீண்டெடுத்தார். இவ்வாறு தன் சாம்ராச்சியத்தை உருவாக்கிய சிவாஜி 1674 ல் சத்ரபதி சிவாஜியாக முடி சூடிக்கொண்டார். தொடர்ந்து தன் சாம்ராச்சியத்தை விரிவு படுத்திய சிவாஜி தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மற்றும் செஞ்சிக்கோட்டையை கைப்பற்றினார். கோல்கொண்டா சுல்தானுடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

1680ம் ஆண்டு சிவாஜி நோய்வாய்ப் பட்டு இறக்கும் வரை அவரது சாம்ராச்சியம் தொடர்ந்து விரிவு படுத்தப்பட்டு வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் சாம்ராச்சியத்தின் பாதுகாப்பிற்காக சுமார் 300 கோட்டைகளை உருவாக்கியதும் சத்ரபதி சிவாஜியின் சாதனைகளே.

இதுவே சத்ரபதி வீரசிவாஜியின் கதை!

No comments: